பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் நெல் அறுவடை பணி தீவிரமடைந்துள்ளதால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினமும் டன் கணக்கில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தென்னைக்கு அடுத்தப்படியாக நெல் சாகுபடி உள்ளது. இதில், பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் முதல் போகம் மற்றும் 2ம் போகம் என சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆனைமலை பகுதியில் அறுவடை மேற்கொள்ளப்படும் நெல்லை விவசாயிகள் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்தனர். ஆனால் பல விவசாயிகள், வெளி மார்க்கெட்டில் இடைத்தரகர்களால் அவதிப்பட்டதுடன் கூடுதல் விலை நிர்ணயிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக வேதனையடைந்தனர். இதையடுத்து, நெல் அறுவடை காலங்களில் ஆனைமலையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
