டெல்லியில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவு பெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த சூழலில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். இன்றைய தினம் ஆர்.கே.புரம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில், சுகாதார திட்டங்களை கூட ஆம் ஆத்மி விட்டு வைக்கவில்லை. எல்லாவற்றிலும் ஊழல் தான். அதற்கான தண்டனையை அனுபவிக்க போகிறார்கள். இம்முறை எப்படியும் பாஜக ஆட்சி அமைந்துவிடும். அதன்பிறகு ஏராளமான திட்டங்களை செயல்படுத்துவோம். தற்போது கூட மத்திய பட்ஜெட் 2025-26 அனைத்து தரப்பினருக்கும் பலனளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இது மக்களின் பட்ஜெட். ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோருக்கான பட்ஜெட். குறிப்பாக நடுத்தர மக்களுக்கான பட்ஜெட். இந்திய வரலாற்றில் ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்ட பட்ஜெட் என்று புகழாரம் சூட்டினார். வரும் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
