பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான செலவுகளை அரசே ஏற்கும் என்று விருதுநகரில் நேற்று நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் 2 நாட்கள் கள ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் சென்றார்.
பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்து தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஆய்வு செய்த முதல்வர், தான் வாங்கி வந்த கேக், பிஸ்கட் மற்றும் பழங்களை அவர்களுக்கு வழங்கினார். இதனால் நெகிழ்ச்சியடைந்த மாணவிகள், முதல்வரை அப்பா என்று அழைத்து மகிழ்ந்தனர். இதையடுத்து, விருதுநகரில் பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து இரவில் விருதுநகரில் தங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இரண்டாவது நாளான நேற்று காலை, விருதுநகரில் ₹77.12 கோடியில் 6 தளங்களுடன் கூடிய புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் பட்டம்புதூரில் நடந்த விழாவில் 57,536 பயனாளிகளுக்கு ₹417.21 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார். இதில் 40,148 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் 17,408 பேருக்கு வணிக வரி மற்றும் பதிவுத்துறை, மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
