களக்காடு அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள திருக்குறுங்குடி பகுதியின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இங்கு நஞ்சை, புஞ்சை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர தோட்டப் பயிர்களும் பயிர் செய்யப்படுகிறது. பெரும்பாலும் வட கிழக்குப்பருவ மழை காலங்களில் நெல் மற்றும் வாழை பயிர்களை பயிர் செய்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதால், திருக்குறுங்குடி பெரிய குளத்துப்பாசன விவசாயிகள் வயல்களில் நடுகை போடுவதற்கு முன்னேற்பாடாக வயல் வெளிகளை சமன் செய்து அதில் தண்ணீர் தேக்கி டிராக்டர் மூலம் உழவுப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.உழவு செய்த விளை நிலங்களில் நொச்சி இலை, கொலிஞ்சி இலை,வேப்ப இலைகளை அடியுரமாக போட்டு வருகின்றனர்.
