இந்தியாவின் மிக பழமையான நகரமாக மதுரை திகழ்கிறது:
இந்தியாவின் மிக பழமையான நகரமாக மதுரை திகழ்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாபெரும் பண்பாட்டு விழாவாக மதுரை சித்திரை திருவிழா நடைபெறுகிறது. மாமதுரையை போற்றும் விழா இன்று தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. மாமதுரை விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் காணொலிக்காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது; திங்களைப் போற்றுதும்… திங்களைப் போற்றுதும்… ஞாயிறு போற்றுதும்… ஞாயிறு போற்றுதும்… மாமழை போற்றுதும்… மாமழை போற்றுதும் என்று சிலப்பதிகாரம் தீட்டிய இளங்கோவடிகள் எழுதினார்.
இப்போது, “மா மதுரை போற்றுவோம்! மா மதுரை போற்றுவோம்!”-என்று வேள்பாரி தீட்டிய எழுத்தாளர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் நிகழ்ச்சியை நடத்துகிறார். எல்லாருக்கும் அவர் அவர்களின் ஊர் பெருமைக்குரியதுதான்; போற்றுதலுக்குரியதுதான். அதிலும் குறிப்பாக, மதுரை மாநகர் என்பது பல்வேறு வரலாற்றுப் பெருமைகளைக் கொண்டது என்று நான் அதிகம் விளக்கத் தேவையில்லை. இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்று மதுரை, இரண்டாயிரம் ஆண்டு வரலாறு கொண்டது மதுரை, பாண்டிய மன்னர்கள் தலைநகராக ஆட்சி செய்த நகரம், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியப் பாண்டியன் ஆட்சி செய்த நகரம்.
