நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்த நிலையில், முறையான அறிவிப்பு இல்லாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பயணிகளை ஏற்றி இறக்குவதில் குழப்பம் நிலவியது. இஷ்டத்திற்கு கண்ட இடங்களில் ஏற்றி, இறக்கிச் சென்றதை காண முடிந்தது.நாமக்கல் மாநகராட்சி 2வது வார்டு முதலைபட்டியில், ரூ.19.50 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 22ம் தேதி திறந்து வைத்தார்.
புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று காலை முதல் புறநகர் பஸ்கள் இயக்கப்பட்டது. அதிகாலை 4.30 மணி முதல் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு புறநகர் பஸ்கள் வரத்தொடங்கின. இங்கிருந்து பயணிகளுடன் வெளியூர்களுக்கு புறப்பட்டு சென்றன. பெரும்பாலான பயணிகளுக்கு பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் செய்யப்பட்ட விபரம் தெரியவில்லை. இதனால், அவர்கள் பழைய பஸ் ஸ்டாண்ட் சென்று, பின்னர் புதிய பஸ் ஸ்டாண்ட் வந்தனர். பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து புதியதாக டவுன் பஸ்கள் இயக்கப்படவில்லை. ஏற்கனவே செல்லும் ராசிபுரம் டவுன் பஸ்கள் தான், புதிய பஸ் ஸ்டாண்டுக்கு இயக்கப்பட்டது.
