அன்னை சாந்தாவுக்கு முதல்வர் காவல்துறை மரியாதை!
சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவரும், உலக புகழ்பெற்ற புற்று நோய் நிபுணருமான மருத்துவர் சாந்தா மரணம் அடைந்த நிகழ்வுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தக்க மரியாதை செய்து கொடுத்துள்ளார். அது குறித்த அறிவிப்பு இது.
மருத்துவர் சாந்தா அவர்கள், 1955 ம் ஆண்டில் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் பணியில் சேர்ந்து பல்வேறு முக்கிய பதவிகளில் பணியாற்றியவர். இவர் தனது தன்னலமற்ற சேவையின் மூலம் பல்வேறு தரப்பினரின் ஆதரவினை பெற்று 12 படுக்கைகளுடன் துவங்கப்பட்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை மேம்படுத்தி, நவீன வசதிகளை கொண்டு வந்து, புற்று நோயால் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக உயர்தர சிகிச்சை அளித்தவர் என்ற பெருமைக்குரியவர்.
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 2013 ம் ஆண்டு, மருத்துவர் சாந்தா அவர்களுக்கு ஔவையார் விருது வழங்கி சிறப்பித்தார்கள். மருத்துவர் சாந்தா அவர்களின் மகத்தான மருத்துவ சேவையைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் விருகளை வழங்கி கௌவுரவித்துள்ளது. இது தவிர, இவருக்கு உலக புகழ்பெற்ற மகசேசே விருதும் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மட்டுமல்லாமல், பிற மாநிலங்களிலிருந்து வரும் வறிய நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் அடையாறு புற்று நோய் சிசிச்சை மையத்தின் மனித நேய கொள்கை பாராட்டிற்குரியது. அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் உன்னதமான சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு இம்மையத்திற்கு தேவையான உதவிகளை வழங்கி, இதனை மாநில அளவில் புற்று நோய் சிகிச்சைக்கான, தலைமை மையமாகவும் அங்கீகரித்துள்ளது.
மருத்துவர் சாந்தா அவர்களின் மறைவு மருத்துவ துறைக்கும், தமிழ்நாட்டிற்கும் மிகப் பெரிய இழப்பாகும். இவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. அவர் மறைந்தாலும், அவரது சிகிச்சை முறைகள் அனைத்து தரப்பு மக்களிடத்திலும் நிலைத்து, அன்னாரது நினைவைப் போற்றிக் கொண்டிருக்கும்.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த மருத்துவர் சாந்தா அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அன்னாரின் தன்னலமற்ற சேவையினை கௌரவிக்கும் விதமாகவும் அன்னாரின் இறுதி சடங்குகளின் போது காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியிருக்கிறார்.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ் மலர் மின்னிதழ்.