கீழ்பவானி பாசன சபை தேர்தலில் முறைகேடு; தி.மு.க., மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!
கோவை: ”உண்மையான விவசாயிகளால் நடத்தப்பட்ட கீழ்பவானி நீர் பாசன சபையை, தி.மு.க.,வினர் சதி செய்து கைப்பற்றி உள்ளனர்,” என, மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.இதுகுறித்து, அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை:
ஈரோடு, பவானி மற்றும் கரூர் மாவட்ட பகுதிகளில் நதி நீர் பாசனம், பல ஆண்டுகளாக நீர்ப்பாசன சபையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. கீழ்பவானி, கொடிவேரி, பெருமுகை மற்றும் அரக்கன்குளம் ஆகிய நீர்ப்பாசன கோட்டங்கள் பிரிக்கப்பட்டு, இந்த பகுதிகளில் நீர் மேலாண்மை பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு, 900 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.
இதில், 750 கோடி ரூபாய் பவானி கோட்டத்தில் அமைந்துள்ள, 50க்கும் மேற்பட்ட நீர்ப்பாசன சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.இந்த தொகையை கொண்டு, பாசன சபைகளால் வாய்க்கால் வெட்டவும், பராமரிக்கவும், மராமத்து பணிகளை மேற்கொள்ளவும் செலவு செய்யப்படும்.
மத்திய அரசின் இந்த நிதி கிடைத்தவுடன், நதி நீர்ப்பாசன மகா சபைகளை கைப்பற்ற தி.மு.க., பெரும் சதி செய்துள்ளது. இதற்காக, அவசரமாக கீழ்பவானி நீர்ப்பாசன சபைகளுக்கு தேர்தல் நடத்தியுள்ளனர்.மார்ச், 14-ல் திடீரென தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, மார்ச் 18ல் வேட்பு மனு தாக்கல் செய்து, தி.மு.க., வேட்புமனுக்களை மட்டும் திட்டமிட்டு ஏற்றுக்கொண்டு, மற்றவர்கள் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளனர்.
விவசாயத்துக்கும். மகாசபைக்கும் சம்பந்தம் இல்லாத நபர்களை போட்டியின்றி தேர்தலில் வெற்றி பெற செய்துள்ளனர்.உண்மையான விவசாயிகளால் நடத்தப்பட்ட நீர் பாசன சபையை, இப்போது தி.மு.க.,வினர் சதி செய்து கைப்பற்றி உள்ளனர். முதல்வர் உடனடியாக தலையிட்டு, நேர்மையான முறையில் மறுதேர்தல் நடத்த வேண்டும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.