இந்தியாவில் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடப்படுமா? – மத்திய அரசு விளக்கம்…
தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் பல்வேறு விதமான நோய் எதிர்ப்புச்சக்திகள் உருவாகின்றன.
நாட்டு மக்கள் அனைவருக்கும் முழுமையாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்ட பின்னர்தான் ‘பூஸ்டர் டோஸ்’ பிரச்சினை எடுத்துக்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தடுப்பூசிக்கான தேசிய தொழில் நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா, இது குறித்து கூறுகையில், அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை அனைவருக்கும் 2 டோஸ் முழுமையாக வழங்குவதில்தான் முதன்மையான கவனம் செலுத்தப்படுகிறது.
இது வரை பூஸ்டர் டோஸ் பற்றி விவாதிக்கவே இல்லை. அனைவருக்கும் முழுமையாக கொரோனா தடுப்பூசி என்ற முதன்மையான நோக்கம் நிறைவேறிய பின்னர்தான் ‘பூஸ்டர் டோஸ்’ பற்றி கவனத்தில் கொள்ளப்படும்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் ஒவ்வொருவருக்கும் பல்வேறு விதமான நோய் எதிர்ப்புச்சக்திகள் உருவாகின்றன. தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளவர்கள், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முறை பின்பற்றப்பட வேண்டுமா என்பதை ஆய்வுகள் மட்டுமே வழி நடத்தும்.
தடுப்பூசிக்கு பிறகு பொதுவான நோய் எதிர்ப்புச்சக்தி உருவாகிறது. அதே நேரத்தில் ‘டி’ செல்நோய் எதிர்ப்புசக்தியும் உள்ளது. எந்த எதிர்ப்புச்சக்தி இழக்கப்படுகிறது என்பதைத் தீர்மானிப்பது கடினம். அறிவியல் சான்றுகள் மட்டுமே இதுபோன்ற முடிவுகளுக்கு வழிநடத்தும். இப்போதைக்கு, அனைவருக்கும் முன்னரே தீர்மானிக்கப்பட்டபடி தடுப்பூசிகளை போடுவதுதான் எங்களது முதன்மையான திட்டம்” இவ்வாறு கூறினார்.