தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது – தேர்தல் ஆணையம்

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வருகின்ற ஜூன் 16 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதேபோன்று அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் ஜூன் மாதத்தில் பல்வேறு தேதிகளில் நிறைவடைய உள்ளது. அதற்கு முன்னதாக மக்களவைக்கும், நான்கு மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இந்நிலையில், மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தேர்தல் ஆணையர்கள் சுக்வீர் சிங் சந்து, கியானேஷ் குமார் ஆகியோர் கூட்டாக தேர்தல் தேதியை அறிவித்தனர்.

அதன்படி, மொத்தம் உள்ள 543 தொகுதிகள் கொண்ட மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 40 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் சுமார் 96.8 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக லைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். இதில், 49.7 கோடி ஆண் வாக்காளர்களும், 47.1 கோடி பெண் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். 20 முதல் 29 வயதிற்கு இடைப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 19.47 கோடி பேர் என்றும், இதில் முதல்முறை வாக்களிக்க உள்ளவர்கள் மட்டும் 1.8 கோடி பேர். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும் கூறினார். இதில், தமிழ்நாட்டில் மட்டும் 68,144 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். மேலும், தேர்தல் பணியில் 1.5 கோடி அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.