தடுப்பூசி இயக்கம் அறிவியல் சார்ந்தது: பிரதமர் மோடி பெருமிதம்!!

‘கொரோனா தடுப்பூசி இயக்கமானது அறிவியல் சார்ந்தது. மக்களால் இயக்கப்படுகிறது,’ என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 12 வயது முதல் 14 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இந்தியா தனது மக்களுக்கு தடுப்பூசி போடும் முயற்சியில் இன்று (நேற்று) ஒரு முக்கியமான நாள். 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு தகுதியானவர்கள்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை டோஸ் பெற தகுதியுடையவர்கள். இந்த வயதில் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி இயக்கமான இந்தியாவின் தடுப்பூசி இயக்கம், அறிவியல் சார்ந்தது. இது, மக்களால் இயக்கப்படுகிறது. இலவசமாக கொரோனா தடுப்பூசியை பெறுவதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும். நாட்டில் மொத்தம் 180 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது,’ என கூறியுள்ளார்.

நேற்றைய பாதிப்பு 2,876: ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடு முழுவதும் கொரோனா புதிய தொற்று பாதிப்பு 2,876 ஆக பதிவாகிவுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,29,98,938 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 98 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவானதை அடுத்து உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 5,16,072 ஆக அதிகரித்தள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 32,811 ஆக குறைந்துள்ளது. குணமடைவோர் எண்ணிக்கை 98.72 சதவீதமாக அதிகரித்துள்ளது,’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.

Leave a Reply

Your email address will not be published.