புதுச்சேரியில் ஏப்ரல் 6ந்தேதி 48 மணி நேரத்திற்கு முன்பு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

புதுச்சேரி சட்டசபைக்கான தேர்தல் வருகிற 6ந்தேதி ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது.  வாக்கு எண்ணிக்கை மே 2ந் தேதி நடைபெறும்.  தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

அரசியல் கட்சிகளும் பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டுவது, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பது உள்ளிட்ட பிரசார பணிகளில் ஈடுபட்டன.  தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்காக தேர்தல் ஆணையமும் செயல்பட்டு வருகிறது.

இதுபற்றி புதுச்சேரி மாவட்ட கலெக்டர் பூர்வ கார்க் கூறும்பொழுது, புதுச்சேரியில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 6ந்தேதிக்கு 48 மணிநேரத்திற்கு முன்பு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இதன்படி, அமைதிக்கு எதிரான சட்டவிரோத வகையில் ஒன்று கூடுதல், ஆயுதங்களை வைத்திருத்தல், கம்புகள் மற்றும் பேனர்களை வைத்திருத்தல், கோஷங்களை எழுப்புதல், ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

இந்த உத்தரவு, வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு கேட்பதற்கு தடை விதிக்காது.  பொது ஊரடங்கு, மத விழாக்கள், திருமணங்கள், இறுதி சடங்குகள் அல்லது பிற தேர்தல் தொடர்புடைய செயல்களுக்கோ இது பொருந்திடாது.  மக்கள் அதிகளவில் வந்து தங்களுடைய வாக்குகளை செலுத்த வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.

செய்தியாளர் சையது அலி

தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.