ஜோதிட பலனை எப்படிச் சொல்ல வேண்டும்?

ஒரு நல்ல காரியத்திற்கு நாள் பார்க்கும் போது, நல்ல யோகம் வந்து விட்டதா? என பார்க்க வேண்டியது அவசியமாகிறது

பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தருமர், தான் ஒரு சக்கரவர்த்தியாக வேண்டும் என்பதற்காக ராஜசுய யாகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். யாகத்துக்கு உண்டான திரவியங்களை மற்ற அரசர்கள் தர வேண்டும். அத்துடன் தருமருக்கு அடிமை எனும் வகையில் சிற்றரசனாக இருக்க ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் தருமருடன் போர் புரிய வேண்டும். தோற்றால், தோற்றவன் தருமருக்கு அடிமை. எனவே அவனது திரவியங்கள் தருமரை சேரும். வென்றால் வென்றவன் சுதந்திரமாக தருமருக்கு நட்பு அரசனாக இருக்கலாம். அவன் தருமருக்கு திரவியங்களை தர வேண்டியதில்லை. அந்த வகையில் தருமருக்கு ஏகப்பட்ட திரவியங்கள் சேர்ந்து விட்டன.இனி யாகம் செய்ய வேண்டியதுதான் பாக்கி.

தனது தம்பியும் ஜோதிடக்கலை வல்லுனருமாகிய சகாதேவரை அழைத்து யாகத்துக்கான நல்ல நாள் குறிக்க சொன்னார். நல்ல நாளும் குறிக்கப்பட்டது. யாகத்துக்கு தலைமை தாங்க ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் வந்தார். யாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆனால் அதனால் கிடைத்த பலன் என்ன? தருமர் சக்ரவர்த்தி ஆனாரா? இல்லையே. தருமர், தன் தாயார் மற்றும் குடும்பத்தாரோடு, உண்ண உணவின்றி, உறங்க இடமின்றி காட்டில் அலைய நேர்ந்தது. இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து உத்தவர் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம் ஒரு சந்தேகம் கேட்டார்.

உத்தவரின் கேள்வி::::::::::::::::::::::::::” ஐயனே, உலகித்தில் மிகச்சிறந்த ஜோதிடக்கலை வல்லுனராகிய சகாதேவர், நாள் குறித்தாரே! அந்த நாள் குறையுடையதா? சகாதேவர் ஜோதிடக்கலைக்கு துரோகம் செய்துவிட்டாரா? நீங்கள் தலைமை தாங்கினீரே! அவர்களுக்கு நீங்கள் அருள் புரியாமல் விட்டு விட்டீர்களா? எதனால் இப்படி நடந்தது?

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பதில்::::::::::::::::::::::::::::::: நாளும் சுபகரமானதே. என் அருளும் குறைவிலாததே. ஆனால் ராஜசுய யாகம் என்ற நல்ல காரியத்துக்கு, தருமர் திரட்டிய திரவியங்கள் பாப சம்பந்தப்பட்டவை. போரில் அனேகம் பேர் இறந்தனர். பல அரசர்கள் வேதனையுடன் திரவியங்களை தந்தனர். இப்படி பாவப்பட்ட வழியில் கிடைத்த திரவியங்களை கொண்டு என்னதான் நல்ல நாள் பார்த்து { இது ஜோதிடர் தவறல்ல }, நல்ல காரியம் செய்தாலும், அது உடனே பலனளிக்காது. அதற்கென்று பலன் உண்டு அது தாமதமாக கிடைக்கும். என் அருளும் அப்படித்தான்

இப்படிப்பட்ட காரணங்களால், யாகத்தின் பலனும் என் அருளும் 14 ஆண்டுகள் தாமதமாக கிடைத்தன.

உத்தவரின் கேள்வி ஐயனே, மிகச்சிறந்த ஜோதிடரான சகாதேவருக்கு, தருமர் காடு போவார் என்று முன்னமே தெரியாதா?

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இது சகாதேவன் { ஜோதிடர் } செய்த தவறு. அண்ணன் நாள் பார்க்க சொன்னான். யாகத்துக்குண்டான ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்த சகாதேவன், எப்படியும் யாகம் நடக்கப்போகிறது என்ற எண்ணத்தில், நாள் குறித்தான். அவன் , அண்ணனுக்கு தம்பியாக இருந்து நாள் குறித்தானே தவிர, ஜாதகருக்கு ஒரு ஜோதிடராக இருந்து செயல்படவில்லை. செயல்பட்டிருந்தால், தருமனுக்கு தற்போது சக்ரவர்த்தி ஆகும் யோகம் உள்ளதா? என ஆராய்ந்திருப்பான்.

ஆகவே ஒரு நல்ல காரியத்திற்கு நாள் பார்க்கும் போது, நல்ல யோகம் வந்து விட்டதா? என பார்க்க வேண்டியது அவசியமாகிறது. இந்த பொறுப்பு, ஜாதகருக்கும், ஜோதிடருக்கும் உண்டு. அதே போல் மிக நுணுகி ஆராய்ந்து நல்ல நாள் பார்த்தாலும், அதிலும் ஒரு குறை ஏற்படுகிறது என்றால் அது ஜோதிடர் தவறு இல்லை என்பதை மேற்கண்ட பாரத நிகழ்வின் மூலம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் நாம் ஜோதிடராக இருந்தாலும்கூட நம்மை அறியாமல் தவறு செய்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே ஒரு ஜோதிடர் ஜாதகம் பார்க்கும் வேளையில், தனது மகிழ்ச்சி, துன்பம், போன்ற மன உணர்வுகளுக்கு இடம் தராமல் இருக்க வேண்டும். வந்திருக்கும் ஜாதகர் உறவினரா? நண்பரா? ஏழையா? பணக்காரரா? மேதையா? பேதையா? என்ற பேதங்களுக்கும் இடம் தராமல் நடுவு நிலையுடன் இருந்து ஜோதிட பலன் உரைக்க வேண்டும்.

ஜோதிட ஆய்வில்
Astro செல்வராஜ்

வே. இராஜவர்மன் டில்லி தலைமை செய்தி ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published.