அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சார பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

திமுக சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மற்றும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் பங்கேற்கும் மாபெரும் பிரச்சார கூட்டம் சேலத்தில் மார்ச் 28-ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்கும் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஏப்ரல் 2 ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். 

மதுரை பாண்டிக்கோவில் சுற்றுவழிச்சாலையில் உள்ள அம்மா திடலில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இன்று காலை பிரச்சார மேடைக்கான கால்கோள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

நேற்றைய தினம் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவினர், அம்மா திடலுக்கு நேரில் வந்து விழாவிற்கான மேடை அமைப்பது, நாற்காலிகளை எந்த திசையில் அமைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். பிரதமர் மோடி பிரச்சாரத்திற்கு வர உள்ளதால், சுற்று மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான அதிமுக, பாஜக தொண்டர்கள் வருவார்கள் என்றும் அதற்கு ஏற்றவாறு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.