ஆம் ஆத்மி சோம்நாத் பாரதிக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை
எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் பாதுகாவலரை தாக்கிய வழக்கில், ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதிக்கு மேல்முறையீட்டில் 2 ஆண்டு ஜெயில் தண்டனையை டெல்லி கோர்ட்டு உறுதி செய்தது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.வாக சோம்நாத் பாரதி பதவி வகித்து வருகிறார். இவர் முன்னாள் மந்திரியும் ஆவார்.
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி, சோம்நாத் பாரதி தனது ஆதரவாளர்களுடன் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று தகராறு செய்தார். ஆஸ்பத்திரியின் சுற்று சுவரை பொக்லைன் எந்திரம் உதவியுடன் இடித்தார். தடுக்க வந்த ஆஸ்பத்திரி காவலாளிகளை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் கோர்ட்டு சோம்நாத் பாரதிக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து டெல்லி தனி கோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார். அம்மனுவை நேற்று தள்ளுபடி செய்த நீதிபதி விகாஸ் துல், 2 ஆண்டு ஜெயில் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார்.