அன்பே சிவம் தத்துவம்

மகா சிவராத்திரி மகிமை!

தென்னாடுடைய சிவனாருக்கு
உரிய ராத்திரி…
மகா சிவராத்திரி

இன்று வியாழக்கிழமை 11.3.21 மகா சிவராத்திரி.

ஈசனை வணங்குவோம். இந்தப் பிறப்பில் இருந்து விடுபடுவோம்.

மகா சிவராத்திரி என்றால் பட்டினி கிடப்பது, கண்விழிப்பது, கோயிலுக்குச் செல்வது என்று மட்டுமே அறிந்திருக்கிறோம். ஆனால் அவைமட்டுமின்றி, இதன் தத்துவத்தை உணர்ந்து விரதத்தை அனுஷ்டித்தால், வாழ்க்கைக்கு, இந்த நம் பிறப்புக்கு உரிய அர்த்தம் என்பதையும் உணர்ந்துகொள்ளலாம் என்கின்றன சிவஞான நூல்கள்!

அதாவது,
நம் மனம் சந்திரனின் இயக்கத்தைப் பொருத்துதான் செயல்படுகின்றன. அதனால்தான் சந்திரனை மனோகாரகன் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

சந்திரன் வளரும்
நாட்கள் 15.
அதையடுத்து பெளர்ணமி. தேயும் நாட்கள் 15.
அதன் பிறகு அமாவாசை.
இதில் தேய்பிறையின், 14வது நாள், அதாவது, அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரன் ஏறத்தாழ மறைந்தே இருக்கும். கிட்டத்தட்ட, நம்முடைய மனமும் இப்படித்தான்… ஒருநாள், ஒன்றை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசை பொங்கும். அடுத்த நாளே, ‘அது எதற்கு, அதனால் என்ன…’ என்றெல்லாம் யோசித்து, அந்த எண்ணம் தேய்ந்து போகும். மறுநாளே, ’விட்டேனா பார்…’ என்று, அதே ஆசையின் மீது லயிப்பும் கூடுதல் வேகமும் வளரும்.

இப்படி நிலையில்லாமல் இப்படியும் அப்படியுமாக இருப்பதுதான் மனம். அதனால்தான் மனம் ஒரு குரங்கு என்று நமக்குப் புரிவதற்காகச் சொல்லி
வைத்திருக்கிறார்கள் ஞானியர்!

சரி… சிவராத்திரியை தேய்பிறையின் 14ம் நாளில் ஏன் அனுஷ்டிக்கிறோம் தெரியுமா?

மனித மனமானது, நிலைப்பதற்கு, நிலைத்து ஒருமித்து இருப்பதற்கு தியானம் மிக மிக அவசியம். அலைபாய்ந்துகொண்டிருக்கும் மனதை அடக்குவதற்கு, அடக்கி ஒருநிலைப்படுத்துவதற்கு சிவ தியானம் மிகப்பெரிய அளவில் நமக்கு உதவும்.

அமாவாசைக்கு முந்தையநாள், சந்திரனின் மிகச்சிறிய அளவு இருப்பது போல, நம் மனதிலும் ஆசை, களவு, காமம், கோபம் என மிகச்சிறிய அளவிலே இருக்கும். அதையும் அகற்றவேண்டும். அதுவும் நம் மனதில் இருந்து அகலவேண்டும். அப்படி அவற்றை முழுவதும் அகற்றினால்தான், இந்தப் பிறவியில் இருந்து நாம் விடுபட்டு, சிவனாரின் பாதக் கமலங்களை அடைய முடியும். அப்படி அடைவதற்காக சிவபெருமானை வழிபடும் உன்னத நாள்தான் சிவராத்திரி.
மகா சிவராத்திரி!

இந்த உயரிய தத்துவத்தை உணர்த்துவதற்காகத்தான், சிவனாரே லிங்க வடிவத்தில் காட்சி தருகிறார் என்கின்றன ஞானநூல்கள். சிவன்… ஆதி அந்தம் இல்லாதவர். ஆரம்பமும் இல்லாமல் முடிவும் இல்லாமல் இருப்பவர் சிவனார் என்பதை உணர்த்தவே லிங்க ரூபத்தின் மூலமாக நமக்கு உணர்த்தப் பட்டிருக்கின்றன.

ஆனால் மனிதர்களாகிய நமக்கு அப்படி இல்லை. பிறப்பு முதலெனில், இறப்பு முடிவு. நம் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப, பிறவிகள் அமைகின்றன.

’ஏழ்பிறப்பு’ என்று சொல்லுவார்கள். அதாவது ஏழு பிறப்பு என்பார்கள். அதேசமயம் ‘எழுபிறப்பு’ என்கிறது சாஸ்திரம். அதாவது எழுந்துகொண்டே இருக்கும் பிறப்பு என்று அர்த்தம். இப்படி எழுந்துகொண்டே இருக்கிற பிறப்புக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் உன்னத வழிபாடுதான் மகா சிவராத்திரி வழிபாடு!

நாம் செய்த பாவக் கணக்குகள் அடையும் வரை, பிறவி தொடர்ந்துகொண்டே இருக்கும். பிறவிக்கடனை அடைப்பதற்குத்தான் புண்ணியங்களும் வழிபாடுகளும்! அந்தப் புண்ணியங்கள் கிடைப்பதற்குதான், சிவ வழிபாடு, மகாசிவராத்திரி வழிபாடு முதலானவை கைகொடுத்து தூக்கிவிடுகின்றன.

அதேபோல், இன்னொன்றும்… பெரிதும் உதவுகிறது.
அது ‘அன்பே சிவம்’. மனிதர்களையெல்லாம் படைத்த சிவனாரிடமும் நம்மைப் போல் வாழ்ந்துகொண்டிருக்கிற மனிதர்களிடமும் அன்புடன் கனிவுடன் கரிசனத்துடன் உண்மையுடன் பழகினாலே, பாவங்கள் தொலைந்து விடும். பிறப்பு அறுந்துவிடும். புண்ணியம் பெருகி, நற்கதி அடைந்துவிடுவோம்.

ஆகவே, மகாசிவராத்திரியின் அன்பே சிவம்
தத்துவத்தை உணர்ந்து, பிறவியிலிருந்து, பிறப்பில் இருந்து விடுதலை பெறுவோம்.

அன்பே சிவம்!

வே. இராஜவர்மன் டில்லி தலைமை ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published.