மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் நிறைவு

புதுடெல்லி: 

பாகிஸ்தானுக்குச் செல்லாத, இந்திய முஸ்லீம் என்று பெருமிதம் கொள்ளும் அதிர்ஷ்டசாலி மக்களில்  நானும் ஒருவனாக தன்னை எண்ணுவதாக மாநிலங்களவையில்  எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் இன்று உருக்கமாக பேசினார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்,  மாநிலங்களவை உறுப்பினருமான குலாம் நபி ஆசாத் உள்பட 4 உறுப்பினர்களின் பதவிக்காலம்  நிறைவடைகிறது. 

ஜூன் 8, 2014 முதல் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத் பிப்ரவரி 15 அன்று மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறுகிறார்.மாநிலங்களவையில் அவருக்கு பிரிவுபசாரம் நடைபெற்றது. 

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாநிலங்களவையில் ஆசாத் உடனான நெருங்கிய தொடர்பை நினைவுபடுத்துகையில் பல முறை கண்கலங்கினார்.

மாநிலங்களவைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு பேசும் போது  சில தசாப்தங்களாக ஆசாத் அரசாங்கத்திலும் எதிர்க்கட்சியிலும் பணியாற்றும் போது மதிப்புமிக்க பங்களிப்புகளைச் செய்து உள்ளார்.  பொது வாழ்க்கையில் நல்லறிவின் குரல் என்று அவரை வர்ணித்தார்.

சபை சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோரை இழந்ததால் ஆசாத்தின் ஓய்வு குறிப்பாக வேதனையானது என்று நாயுடு கூறினார்.

ஆசாத் நாட்டில் மிகவும் அனுபவம் வாய்ந்த தலைவர் மற்றும் பல துறைகளை கையாண்டவர் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார்.

குலாம் நபி ஆசாத் மீண்டும் மாநிலங்களவைக்கு திரும்பி வர வேண்டும் என்று தெரிவித்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, காங்கிரசால் அதனை செய்ய முடியவில்லை என்றால், தாங்கள் செய்ய தயாராக இருப்பதாக கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநிலங்களவையில் உள்ள மற்ற சகாக்களுக்கு நன்றி தெரிவித்த குலாம் நபி ஆசாத் தனது பிரியாவிடை உரையை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

சொர்க்கம் இந்தியா என்று நான் எப்போதுமே உணர்ந்திருக்கிறேன், நான் சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்தவன். பாகிஸ்தானுக்குச் செல்லாத அந்த அதிர்ஷ்டசாலி மக்களில் நானும் ஒருவன். பாகிஸ்தானின் சூழ்நிலைகளைப் பற்றி நான் படித்தபோது, ​​ஒரு இந்திய முஸ்லீமாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என கூறினார். 

செய்தி ரஹ்மான்

தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.