சென்னை வானிலை ஆய்வு மையம்.
சென்னை,
வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் சுழற்சியின் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தென்தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்தது. விழுப்புரத்தில் செஞ்சி, திண்டிவனம், விக்கிரவாண்டி, கோலியனுர், திருவெண்ணைநல்லூர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்தது. கடலூரில் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம், வடலூர், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் ஆரணி, செய்யார் உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
புதுச்சேரி, காலாப்பேட், கனகசெட்டிக்குளம், வில்லியனூர், மதகடிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரி நகரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. புதுச்சேரியில் பல்வேறு முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நெல்லை, சேலம், தேனி, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்தி ரசூல்
தமிழ்மலர் மின்னிதழ்