காவரி – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம்

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே குன்னத்தூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ரூ.6,941 கோடி மதிப்பில் காவரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்ட முதல் கட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற உள்ளது.

இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரூ.3,384 கோடி மதிப்பில் விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உபவடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

விழா இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்குகிறார். வெள்ளக் காலங்களில் காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் மூலமாக இப்பகுதி மக்களின் 100 ஆண்டு கால கனவு நிறைவேற்றப்படுகிறது.

இந்த விழாவில் அமைச்சர்கள் டாக்டர்.சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், க.பாஸ்கரன், எஸ்.வளர்மதி மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், வாரியத் தலைவர்கள், உள்ளாட்சி, கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

மேலும், அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் இடத்தில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வரவேற்று பேசுகிறார். முடிவில் கலெக்டர் உமாமகேஸ்வரி நன்றி கூறுகிறார்.

இந்த காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 69 ஆயிரத்து 962 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி ரசூல்

தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.