நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் -28
கசப்புசுவையுடன் உப்பு சுவையும் கொண்டது தான் அகத்திக்கீரை…!
அகத்தை சீராக வைத்திருக்க உதவுவதாலும் , அகத்தில் இருக்கும் தீயை உடல் உஷ்ணத்தை தணிப்பதாலும் இந்த கீரையை அகத்திக்கீரை என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.
சித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக கூறுகிறது. அகத்திக் கீரையில் 8.4 விழுக்காடு புரதமும் 1.4 விழுக்காடு கொழுப்பும், 3.1 விழுக்காடு தாது உப்புகளும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.
அகத்திக்கீரையில் மாவுச் சத்து, இரும்புச் சத்து, வைட்டமின்(உயிர்ச்சத்து) ஏ ஆகியவையும் உள்ளன.
அகத்தி கீரை… வீட்டில் பெரியவர்கள் இருந்த காலம் வரை அகத்திக்கீரை மாதம் இருமுறை உணவில் கண்டிப்பாக இடம்பெறும். கசப்பு சுவைமிக்க அகத்திக்கீரையின் சுவையை பெரும்பாலும் பலரும் விரும்புவதில்லை. ஆனால் உடல் ஆரோக்கியம் அளிக்க பல சுவைகளோடு கசப்பு சுவையும் கண்டிப்பாக தேவை.
காயங்களுக்கு இலையை அரைத்துப் போட புண்கள் ஆறும்.
அகத்திக் கீரையை சாப்பிடுபவர்களுக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். வாரத்திற்கு ஒரு முறையாவது அகத்திக் கீரை சாப்பிட்டு வர, உடல் உஷ்ணம் குறைந்து கண்கள் குளிர்ச்சி பெரும்.
அகத்தி கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால், அது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இலைகளை உலர்த்தி பொடி செய்து காலை, மாலை இருவேளை பாலில் அரைக் கரண்டி அலவு கலந்து குடித்து வந்தால் வயிற்றுவலி குணமாகும்.
தொண்டை புண், தொண்டை வலி ஆகியவை உள்ளவர்கள் அகத்தி கீரையை பச்சையாக மென்று சாப்பிட்டால் விரைவில் தொண்டை பிரச்சனை குணமாகும். அகத்தி கீரை வயிற்றில் உள்ள புழுவை கொள்ளும், மேலும் மலச்சிக்கலை தீர்க்கும்.
உயர்ந்த இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது அகத்தி கீரையை உணவில் சேர்த்து கொண்டால் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
தொண்டை வலி மற்றும் குடல் புண் பிரச்சனையை சரி செய்ய அகத்திக் கீரை பயன்படுகிறது. மதிய வேளையில் இதை சாப்பிட்டு வந்தால் அல்சர் மற்றும் உடலில் உள்ள பித்தம் குறையும்.
அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் குறையும். கண்கள் குளிர்ச்சியாகும். நீராடைப்பு, பித்த மயக்கம் குணமாகும். சிறுநீர் தடையில்லாமல் போகும்.
அகத்தி கீரையின் இலை, பூ, பட்டை, வேர் அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.
சித்தமருத்துவ முறையில் மாத்திரைகள் எடுத்துகொள்பவர்கள் அந்த மருந்தை உட்கொள்ளும் போது இந்த கீரையை சாப்பிடக்கூடாது.
மற்றபடி அனைவரும் சாப்பிடலாம். மாதம் இருமுறை மட்டுமே எடுத்துகொண்டால் பலன் தரும். அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு கேடு தரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் புகைப்பிடிக்கும் போது புகையில் இருக்கும் நிகோடினை உடல் உறிஞ்சும். இவை சுவாசக்குழாய் வழியாக கிரகிக்கப்பட்டு மூச்சுகுழாயில் பயணித்து நுரையீரலில் தங்கி விடும். இவை நுரையீரலில் இருந்து பாதிப்பை உண்டாக்கும் . இந்த நிகோடின் நச்சை வெளியேற்ற உதவும் சிறப்பு அகத்திக்கீரைக்கு உண்டு.
மாதம் இருமுறை அகத்திக்கீரையை கசப்பு நீக்காமல் பருப்பு தேங்காய் சேர்த்து தேங்காய் எண்ணெயில் பொரியல் செய்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டாலே நுரையீரலில் இருக்கும் நச்சை வெளியேற்றும்.
வயிற்றில் உண்டாகும் புண் நாளடைவில் அல்சர் பிரச்சனையை உண்டாக்கிவிடும். உணவுக்குழாய், இரைப்பை,சிறுகுடலின் உட்சுவரில் உண்டாகும் புண்களை ஆற்றும் வல்லமை கொண்டது அகத்திகீரை. இவை மலக்குடலையும் சுத்தம் செய்து மலத்தை இளக்கி வெளியேற்றூம். சிறுநீர் கடுப்பு பிரச்சனையையும் சரிசெய்யும். உடல் உஷ்ணத்தால் உண்டாகும் வயிற்று புண்களையும் ஆற்றும்.
அகத்திக்கீரையை காம்பு நீக்கி அதனுடன் சாம்பார் வெங்காயம் சேர்த்து காரத்துக்கு மிளகு சேர்த்து மசியல் செய்து சாப்பிட்டாலே வயிற்றுபுண் குணமாகும்.
முன்னோர்கள் உணவை மருந்தாக்கி சாப்பிட்டார்கள். விரத நாட்களின் போது முன்னோர்கள் விரதத்தை முடிக்கும் போது அகத்திக்கீரையை சாப்பிடுவார்கள். உணவு இல்லாமல் இருக்கும் உடல் சோர்வுக்கு அதிக பலத்தை கொடுப்பதோடு உடல் உஷ்ணத்தையும் தருகிறது. உறுப்புகளை சீராக செயல்பட வைக்கிறது. இரத்த ஓட்டத்தை சீராக்கவும் செய்கிறது.
அமாவாசை விரத காலங்களிலும், வைகுண்ட ஏகாதசி காலங்களிலும் அகத்திக் கீரை உணவை எடுத்துகொண்டார்கள். நமது முன்னோர்கள் உணவை மருந்தாக்கி எடுத்துகொண்டதற்கு இதுவும் உதாரணமாக சொல்லலாம்.
அகத்திக்கீரையை அதிகம் சாப்பிட்டால் சருமபிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.சித்த வைத்திய மருந்து சாப்பிடுபவர்கள் அகத்தி கீரையை சாப்பிட்டால் சொறி சிரங்கு பிரச்சனையை உண்டாக்கும். ஆனால் படர் தாமரை பிரச்சனை இருப்பவர்கள் அகத்திகீரை சாறை தடவி வந்தால் படர்தாமரை நாள்பட்டிருந்தாலும் குணமாகும். தலைவலி இருப்பவர்கள் சைனஸ் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தலையில் நீர் கோர்வை பிரச்சனை இருப்பவர்கள் அகத்திகீரை சாறை தடவலாம். கால்களில் பூஞ்சை தொற்று சேற்றுபுண் இருப்பவர்களுக்கும் அகத்திக்கீரை சாறு நல்ல மருந்தாக இருக்கும்.
நோய்களை தடுக்குமஅகத்திக்கீரையில் இருக்கும் வெள்ளை பூக்களை தனியாக சேகரித்து நிழலில் உலர்த்தி பொடித்து வையுங்கள். வயிறு வலி, வயிறு எரிச்சல் இருக்கும் போது கால் டம்ளர் நீரில் கால் டீஸ்பூன் பொடியை சேர்த்து கலக்கி குடித்து வந்தால் வயிறு எரிச்சல் குணமாகும். இருபாலரும் அந்தரங்க உறுப்பில் எரிச்சலை உணர்ந்தால் இந்த பொடியை குடித்து வந்தால் எரிச்சல் குணமாகும். சிறுநீரக கடுப்பு, சிறுநீரக எரிச்சல், இதய நோய் அனைத்தையும் தடுக்கும் வல்லமை அகத்திக்கீரைக்கு உண்டு.
குறிப்பு; நன்மை தரும் அகத்திக்கீரையை அவ்வபோது எடுக்க கூடாது. மாதம் ஒரு முறை வயிற்றில் புண் பிரச்சனை இருப்பவர்கள் இருமுறை எடுக்கலாம். அகத்திக்கீரை பூவை பொடித்து வைப்பவர்களும் அவ்வபோது குடிக்க வேண்டாம். இறைச்சி சாப்பிடும் போதும், மது அருந்தும் போதும் அகத்திக்கீரை, அதன் பூவில் இருந்து தயாரிக்கப்பட்ட பொடி, வேரிலிருந்து தயாரிக்கப்படும் பொடி என எல்லாமே மருத்துவகுணங்களை கொண்டிருந்தாலும் கூட அளவாக எடுத்துகொள்ள வேண்டும்.
“எனவே நோய் வருமுன் காப்போம். வந்தபின் பார்க்கலாம் என்பதை தவிர்ப்போம்….”
நல்ல (உணவு) மருந்து…!
நம்ம நாட்டு (உணவு) மருந்து…!
தொகுப்பு:- சங்கரமூர்த்தி… 7373141119