உலகிலேயே மிகப்பெரிய ரயில் நிலையம்
உலகிலேயே மிகப்பெரிய ரயில் நிலையத்தில் பார்க்க பார்க்க ஆச்சரியப்படும் பல விஷயங்கள் கொட்டி கிடக்கின்றன. அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் தான் அது. இந்த பிரம்மாண்ட ரயில் நிலையத்தை கட்டுவதற்கு 10 ஆண்டுகள் ஆனது. 1903ல் தொடங்கி 1913 வரை பணிகள் நடந்தன. திறப்பு விழா என்பது 1913 பிப்ரவரி 2 நள்ளிரவு 12.01 மணிக்கு நடைபெற்றது. அதன்பிறகு பல்லாயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து செல்லும் இடமாக மாறிவிட்டது. சுமார் 48 ஏக்கரில் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. நியூயார்க் கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் ரயில் நிலையத்தில் 44 பிளாட்பார்ம்கள் இருக்கின்றன. மொத்தம் 67 தண்டவாளங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் இரண்டு சுரங்க வழி தண்டவாளங்கள் ஆகும். உலகிலேயே மிகப்பெரிய ரயில் நிலையம் என்ற அந்தஸ்திற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. தற்போது ஒவ்வொரு நாளும் சராசரியாக 1,50,000 பேர் வந்து செல்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.