எலன் மஸ்கிற்கு வாழ்த்து
அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் கடந்த ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றனர். அவர்கள் சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர்கள் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. அவர்களை மீட்கும் ஆபரேஷனில் இறங்குமாறு, தனது நண்பரும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனருமான எலன் மஸ்கை பணித்துள்ளார் டொனால்டு டிரம்ப். இதற்கு எலன் மஸ்க்கும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் பலர், வெற்றிகரமாக சுனிதா வில்லியம்ஸையும் வில்மோரையும் பூமிக்கு அழைத்து வரவேண்டும் என எலன் மஸ்கிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 8 நாட்கள் மட்டுமே சர்வதேச விண்வெளி மையத்தில் தங்குவார்கள் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்களை அனுப்பிய நாசா மற்றும் போயிங்கின் பொறியாளர்கள், விண்கலத்தின் உந்துவிசை அமைப்பில் கோளாறு ஏற்பட்டதை கண்டுபிடித்தனர். விண்வெளியிலேயே அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.ஆனால் அந்த முயற்சி கைகொடுக்கவில்லை. இதையடுத்து விண்வெளி வீரர்கள் இல்லாமல் போயிங் ஸ்டார்லைனர் ஆள் இல்லாமல் பூமிக்கு திரும்பியது. அப்போதில் இருந்தே இருவரும் ஸ்பேஸ் ஸ்டேஷனிலேயே தங்கியுள்ளனர். வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் நீண்ட காலம் தங்கியிருப்பது அவர்களின் உடல்நலம் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது. மருத்துவ நிபுணர்களும் இரண்டு பேரும் இத்தனை நாட்கள் அவர்கள் விண்வெளியில் இருப்பது சரியல்ல என கூறி வருகின்றனர்.