கார்த்திகை செவ்வாயில், ராகுகால வழிபாடு!
கார்த்திகை மாத செவ்வாய்க்கிழமையில், ராகுகால வேளையில் அம்மனுக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள். இன்னல்களையெல்லாம் போக்கியருளுவாள் துர்காதேவி.
செவ்வாய்க்கிழமை என்பது வழிபாட்டுக்கும் பூஜைக்கும் உகந்த நாள். செவ்வாய்க்கிழமை என்பது அம்பிகையை வழிபடுவதற்கு உகந்த நன்னாள். முக்கியமாக, உக்கிர தெய்வங்களை வணங்கி வழிபடுவதற்கு உரிய நாள்.
அதனால்தான், செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் துர்கை முதலான உக்கிர தெய்வங்களுக்கு விளக்கேற்றுவது மிகுந்த நன்மைகளை அள்ளித்தரும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் முன்னோர்கள். அதிலும் குறிப்பாக, ராகுகால வேளையில், துர்கை, பிரத்தியங்கிரா தேவி வழிபாடு மிக மிக அவசியம் என வலியுறுத்தியுள்ளனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
எல்லா சிவாலயங்களிலும் துர்கைக்கு சந்நிதி அமைந்திருக்கும். இந்த துர்கையை சிவ துர்கை என்பார்கள். அதேபோல், பெருமாள் கோயில்களில் துர்கை அமைந்திருந்தால், அந்த துர்கையை விஷ்ணு துர்கை என்பார்கள். துக்கமெல்லாம் போக்கி அருளுபவள் துர்காதேவி.
அம்மன் ஆலயங்களிலும் துர்கை கோஷ்டத்தில் கொலுவிருப்பாள். செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் ராகுகால வேளையில் துர்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவது மிகுந்த பலன்களைத் தரும்.
கார்த்திகை மாதத்தில் விளக்கேற்றுவதும் துர்கை அஷ்டோத்திரம் சொல்லிப் பாராயணம் செய்வதும் சகல கஷ்டங்களையும் துக்கங்களையும் போக்கும். கடன் பிரச்சினையில் இருந்து நம்மை மீட்டெடுப்பாள்.
அதேபோல், பிரத்தியங்கிரா தேவியும் உக்கிரமானவளே. ராகுகாலத்தில் துர்கையை வழிபடுவது போல, துர்கைக்கு விளக்கேற்றுவது போல, எலுமிச்சையால் தீபமேற்றி பிரார்த்தனை செய்வது போல, வழிபடுவது எதிரிகளை பலமிழக்கச் செய்யும். எதிர்ப்புகளை தவிடுபொடியாக்கும்.
செவ்வாய்க்கிழமை ராகுகாலம் என்பது மாலை 3 முதல் 4.30 மணி வரை. வெள்ளிக்கிழமை ராகுகாலம் என்பது காலை 10.30 முதல் 12 மணி வரை. ஞாயிற்றுக் கிழமை ராகுகாலம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்த ராகுகால வேளையில் அம்மனை வழிபடுங்கள். துர்கையை வழிபடுங்கள். துர்காதேவிக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி, மனமுருகப் பிரார்த்தனை செய்யுங்கள்.
மங்கல காரியங்கள் அனைத்தையும் நடத்தித் தந்திடுவாள். மங்காத செல்வங்களை அள்ளி வழங்கிடுவாள். கார்த்திகை மாத செவ்வாய்க்கிழமையில், ராகுகால வேளையில், துர்காதேவியை ஆத்மார்த்தமாக வழிபடுங்கள். இருளில் இருந்த நம் வாழ்க்கையில் ஒளியேற்றித் தந்திடுவாள் துர்காதேவி!
- க.வைரமணி