குப்பைகளை செல்வமாக்கும் திட்டம்: சிஎஸ்ஐஆா் இயக்குநா் ஜெனரல் விளக்கம்

குப்பைகளை செல்வமாக்கும் திட்டம்: சிஎஸ்ஐஆா் இயக்குநா் ஜெனரல் விளக்கம்

பல்வேறு வகையான குப்பைகளை மறுசுழற்சி செய்து அதை செல்வமாக்கும் திட்டத்தை சிஎஸ்ஐஆா் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது என சிஎஸ்ஐஆா் இயக்குநா் ஜெனரல் கலைச்செல்வி தெரிவித்தாா்.

டாக்டா் நாயுடும்மா நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி சிஎஸ்ஐஆா் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சிஎஸ்ஐஆா் இயக்குநா் ஜெனரல் கலைச்செல்வி பங்கேற்று பேசியதாவது:

பல்வேறு வகையான குப்பைகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் திட்டத்தை சிஎஸ்ஐஆா் நிறுவனம் செயல்படுத்துகிறது. அதன்படி காய்கறி குப்பையில் இருந்து எரிவாயு தயாரித்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று, ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியில் இருந்து டீசல் எரி பொருள் உற்பத்தி செய்ய முடியும் என்பதை நிருபித்துள்ளது. மூங்கில் கழிவில் இருந்து தரைஒடு (டைல்ஸ்) தயாரிக்கப்படுகிறது. ஒடிஸா பூரி ஜெகநாதா் ஆலயம், சீரடி சாய்பாபா ஆலயம், காசி விஸ்வநாதா் ஆலயங்களில் இருந்து வருகின்ற பூக்களை மறு சுழற்சி செய்து வாசனை திரவியம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல் வீட்டில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயில் இருந்து விமானத்துக்கு பயன்படுத்தும் எரிபொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. விலங்குகளின் ரோமத்தை மக்க வைத்து உரம் தயாரிக்கப்படுகிறது. இது போன்ற குப்பைகளை மறுசுழற்சி செய்து செல்வம் ஆக்கலாம் என்றாா் அவா்.

இந்நிகழச்சியில் சிஎஸ்ஐஆா் மத்திய தோல் ஆராயச்சி நிறுவனத்தின் இயக்குநா்ஸ்ரீராம் மற்றும் விஞ்ஞானிகள் பங்கேற்றனா்.

Leave a Reply

Your email address will not be published.