முதல் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்! -கம்பெனி பயோடேட்டா
மிடில்கிளாஸ் மக்களுக்கு சேவை: கலக்கும் இந்தியாவின் முதல் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்! -கம்பெனி பயோடேட்டா
பஞ்சாபில் இருக்கும் ஜலந்தர் எனும் இடத்தைத் தலைமையக மாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் கேப்பிடல் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட் (Capital Small Finance Bank Limited: NSE Symbol: CAPITALSFB, BSE Code: 544120).
ஆரம்பத்தில் கேப்பிடல் லோக்கல் ஏரியா பேங்க் என்ற பெயரில் செயல்பட்டுவந்தது இந்த நிறுவனம். பின்னர், கேப்பிடல் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவின் முதல் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்காகத் தன்னுடைய செயல்பாட்டைத் தொடங்கியது.
நடுத்தர மக்களுக்கு சேவை…
ஜனவரி 2000-ம் ஆண்டு முதல் (பெயர் மாற்றம் செய்யப்படுவதற்கு முன்னதாக) இந்தியாவின் மிகப்பெரிய லோக்கல் ஏரியா பேங்காகச் செயல்பட்டுக்கொண்டிருந்தது கேப்பிடல் லோக்கல் ஏரியா பேங்க். பொருளா தார ரீதியாக நடுத்தரப் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு சரியான வட்டி விகிதத்தில் கடன்கள் வழங்கப்படுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாகப் பெருமையுடன் கூறுகிறது இந்த வங்கி. இந்த நோக்கத்துடன்தான் விரிவாக்கங்களையும் செய்து வருகிறது இந்த வங்கி எனலாம்.
15 ஆண்டுகளுக்கும் மேலாக லோக்கல் ஏரியா வங்கியாக வெற்றிகரமாகச் செயல் பட்டுவந்த இந்த நிறுவனம், ஒரு ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்காகத் தற்போது சிறப்பாக இயங்கி வருகிறது. வைப்பு நிதியைப் பெறுதல், கடன் வழங்குதல் என்ற இரண்டு அடிப்படை வங்கி செயல்பாடுகளைத் தாண்டி பல்வேறு மூன்றாம் நபர்கள் வழங்கும் சேவைகளையும் வழங்கி வருகிறது இந்த நிறுவனம்.
விவசாயக் கடன்கள், மைக்ரோ, ஸ்மால் மற்றும் மீடியம் (எம்.எஸ்.எம்.இ) கடன்கள், வர்த்தகர்களுக்கான கடன்கள், வொர்க்கிங் கேப்பிடல் மற்றும் இயந்திரங்கள் வாங்குவதற்கான கடன்கள் உள்ளிட்ட பல கடன்களை கடன் வழங்குதல் பிரிவில் வழங்கி வருகிறது கேப்பிடல் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்.