இந்திய வெளியுறவு செயலர் ரந்தீர் ஜெய்ஸ்வால்
கனடாவின் பிராம்ப்டனில் கோயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. வழிபாட்டு தலங்களின் பாதுகாப்பை கனடா உறுதிசெய்ய வேண்டும் என்றும் கனடாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பில் இந்தியா அக்கறை கொண்டுள்ளது என்றும் இந்திய வெளியுறவு செயலர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் இந்திய வெளியுறவு செயலர் தெரிவித்துள்ளதாவது; “பிராம்ப்டன் பகுதியில் உள்ள ஹிந்து சபை கோயிலில் நேற்று தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் நடத்திய வன்முறைச் செயல்களை கண்டிக்கிறோம்.
இதுபோன்ற தாக்குதல்களில் இருந்து அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கனடா அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறோம். வன்முறையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கிறோம்.
கனடாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். மிரட்டல், துன்புறுத்தல் மற்றும் வன்முறையால், இந்தியர்களுக்கும் கனடா குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான சேவைகளை தூதரக அதிகாரிகள் வழங்குவதை தடுக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.