வெளிநாட்டில் இருந்து கொகைன் கடத்தி வந்து விற்பனை முன்னாள் டிஜிபி மகன் கைது
குற்றவாளிகளை பொறிவைத்து பிடித்த காவலர்களுக்கு கமிஷனர் அருண் பாராட்டு
சென்னை: வெளிநாடுகளில் இருந்து கொகைன் போதைப் பொருள் கடத்தி வந்து நைஜீரியா வாலிபருடன் சென்னையில் விற்பனை செய்து வந்த முன்னாள் டிஜிபி ரவீந்திரநாத்தின் மகன் அருண் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் சேர்த்து மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளை பொறிவைத்து பிடித்த காவலர்களுக்கு போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல் எல்லையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ‘போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை’ என்ற பெயரில் திடீர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அதேநேரம் சென்னையில் பள்ளி, கல்லூரிகளில் போதை பொருட்கள் முற்றிலும் ஒழிக்கும் வகையில் பெருநகர காவல்துறையில் இதுவரை இல்லாத வகையில் உதவி கமிஷனர் ஒருவர் தலைமையில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு தொடங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நுண்ணறிவு பிரிவு போதை பொருட்களை தடுக்க சுகாதாரத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 18ம்தேதி தனிப்படைக்கு கிடைத்த தகவலின் படி அரும்பாக்கம் திருவீதியம்மன் கோயில் தெருவில் மெத்தம்பெட்டமைன் என்ற போதை பொருள் விற்பனை செய்து வந்த தீபக்(31), பாலிமேத்தா(27) ஆகியோரை கைது செய்தனர்.