அஞ்சல் துறைக்கு நுகர்வோர் நீதிமன்றம் ரூ.15,000 அபராதம்
சென்னை வாடிக்கையாளருக்கு 50 பைசாவை திருப்பித் தராத அஞ்சல் துறைக்கு நுகர்வோர் நீதிமன்றம் ரூ.15,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை கிருகம்பாக்கத்தை சேர்ந்த மானுஷா என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி பொழிச்சலூர் தபால் நிலையத்தில் பதிவு தபால் ஒன்றை அனுப்பியுள்ளார். அதற்கான கட்டணம் ரூ.29.50 காசுகள் என்ற நிலையில் ஊழியர் ரூ.30 செலுத்த வலியுறுத்தியுள்ளார். டிஜிட்டல் முறையில் சரியான கட்டணமாக ரூ.29.50 காசுகளை செலுத்த மானுஷா விருப்பம் தெரிவித்த போதும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக யுபிஐ இயங்கவில்லை என்று ஊழியர் தெரிவித்துள்ளார்
இதனால் ஏமாற்றம் அடைந்த மானுஷா மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார். வழக்கு விசாரணையில் ஆஜரான தபால் துறை 50 காசு போன்ற பைசாக்களில் வரும் கட்டணம் ரூ.1 ஆக மாறும் வகையில் தபால் துறையின் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நுகர்வோர் ஆணையம் தபால் துறைஅதிக கட்டணம் வசூல் செய்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியது. இதனை அடுத்து மானுஷாவுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக வசூலிக்கப்பட்ட 50 காசுகளை திரும்ப வழங்கவும் தபால் துறைக்கு ஆணையிடப்பட்டுள்ளது