புதுச்சேரியில் வரும் 17ம் தேதி ராகுல் காந்தி பிரச்சாரம்!

புதுச்சேரியில் வரும் 17-ம் தேதி ராகுல் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். அன்றைய தினம் மாலை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

தமிழகம், புதுவைக்கு ஒரே நாளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் பரபரப்பு அரசியல் கட்சிகளிடையே பற்றியுள்ளது.

இச்சூழ்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். மேலும் சில நாட்கள் தமிழகத்தில் பிரச்சாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளார். இதனிடையே டெல்லிக்குச் சென்ற புதுவை முதல்வர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோர் புதுவை மாநிலத்துக்கு வந்து தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என ராகுலுக்கு அழைப்பு விடுத்தனர்.

இதனை ராகுல் காந்தி ஏற்று புதுவைக்கு வருவதாக உறுதியளித்தார்.

இதையடுத்து வரும் 17-ம் தேதி ராகுல் காந்தி புதுவைக்கு வருகிறார். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு ஏஎப்டி மில் திடலில் நடத்தப்படும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் சோலை நகரில் மீனவப் பெண்களைச் சந்தித்துக் கலந்துரையாடவும், வணிகர்களைச் சந்தித்து உரையாடவும் ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். அது தொடர்பான விவரங்கள் ஓரிரு நாட்களில் உறுதியாகும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

பாஜக தரப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. முக்கியத் தலைவர்கள் வருகை புரியத் தொடங்கியுள்ளனர். அதேபோல் காங்கிரஸ் தரப்பில் கூட்டணிப் பேச்சுவார்த்தை இதுவரை தொடங்கவில்லை. முக்கியக் கூட்டணிக் கட்சியான திமுகவும் எதிர் மனநிலையில் உள்ளது. இச்சூழலில் காங்கிரஸ் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.