வெடிகுண்டு புரளிகளுக்கு மத்தியில் காலிஸ்தான் தலைவர் எச்சரிக்கை

இந்திய விமான நிறுவனங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், ‘வரும் நவம்பர் 1ம் தேதி முதல் 19ம் தேதிக்குள் ஏர் இந்தியா விமானம் மீது தாக்குதல் நடத்தப்பட இருப்பதால், அதில் யாரும் பயணிக்க வேண்டாம்’ என காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன் வீடியோ வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக இந்திய விமான நிறுவனங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 100 விமானங்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்திருப்பதால் பயணிகள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இந்த மிரட்டல்கள் அனைத்தும் வெறும் புரளிகள் என்றாலும், பாதுகாப்பை உறுதிப்படுத்த சோதனைகள் நடத்தப்படுவதால் விமான புறப்பாட்டில் தாமதம் ஏற்படுவதோடு, பொருளாதார ரீதியாகவும் இந்திய விமான நிறுவனங்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றன.

இந்த வெடிகுண்டு மிரட்டல்களுக்கு பின்னணியில் யார் உள்ளனர் என்பது இதுவரை தெரியவில்லை. இந்நிலையில், இரட்டை குடியுரிமை பெற்று அமெரிக்காவில் வசித்து வரும் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன் சமூக ஊடகங்களில் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் அவர், வரும் நவம்பர் 1ம் தேதி முதல் 19ம் தேதிக்குள் ஏர் இந்தியாவின் எந்த விமானத்திலும் யாரும் பயணிக்க வேண்டாம் என்றும் அந்த சமயத்தில் ஏர் இந்தியா விமானம் மீது தாக்குதல் நடத்தப்பட இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் 40 ஆண்டு நினைவையொட்டி, ஏர் இந்தியா விமானங்கள் தகர்க்கப்பட இருப்பதாக அவர் பீதியை கிளப்பி உள்ளார். வெடிகுண்டு புரளிகளுக்கு மத்தியில் பன்னூனின் இந்த மிரட்டல் விமான பயணிகளிடம் மேலும் பீதியை அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.