சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ்
சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதையடுத்து இன்று பணிக்கு திரும்பினர். ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9ம்தேதி முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது
மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், எ.வ.வேலு, சி.வி.கணேசன் ஆகியோர் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று காலை 9 மணி முதல் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர். தொழிற்சாலை நுழைவாயில் தொழிலாளர்களின் அடையாள அட்டைகளை சோதனை செய்த பிறகே காவலாளிகள் உள்ளே அனுமதித்தனர். அசம்பாவிதம் ஏற்படாமலிருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது