மனதைப் பண்படுத்த நகைச்சுவை உணர்வு வேண்டும்.

உலக வாழ் உயிரினங்களில் நம்மால் மட்டுமே சிரிக்க முடியும். சிரிப்பு என்பது மனிதனுக்கு மட்டும் உள்ள, மற்ற விலங்கினங்களுக்கு இல்லாத சிறப்பு…

இன்றைய சூழலில் நகைச்சுவை உணர்வு அனைவருக்கும் அவசியமானதும் கூட. நல்ல நகைச்சுவை உணர்வு இருப்பவர்கள் வாழ்க்கையின் முக்கியமான அம்சத்தை எட்டிப் பிடித்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை…

நகைச்சுவை என்பது அடுத்தவரைக் காயப்படுத்தும் அளவுக்கு கிண்டல் செய்வது என்பது சிலருடைய வழக்கம்… அதை விட்டு விடுங்கள்…

நகைச்சுவை உணர்வு இருக்கும் மனிதர்கள் தங்களைச் சுற்றி மிக எளிதில் நண்பர் படையை உருவாக்கி விடுவார்கள். அவர்கள் மிக எளிதில் மற்றவர்களோடு பழகவும் செய்வார்கள்…

தலைமைப் பண்பின் மிக முக்கியமான செயலாக இந்த நகைச்சுவை உணர்வைக் குறிப்பிடுகிறார்கள். காரணம்!, நகைச்சுவை உணர்வுடைய தலைவர்கள் நல்ல கடுமையான முடிவுகளைக் கூட எளிமையாய் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சொல்வார்கள் என்பது தான்…

மனிதனுக்குப் பல நேரங்களில் மன இறுக்கத்தை குறைக்க, நட்பை வளர்க்க, ஒருவருக்கொருவர் நெருக்கமாகப் பழக, இடைவெளியை குறைக்க, மனத்தெளிவு, மனமகிழ்ச்சி எனப் பலவிதமான பயன்பாட்டில் திகழ்கிறது இந்தச் சிரிப்பு ஒன்று தான்…

இன்றைய காலகட்டத்தில் நமக்கு கொஞ்சம் நகைச்சுவையும், சிரிப்பும் பஞ்சம் ஏற்பட்டு இருப்பதாகவே கூறலாம். சமுதாய சூழ்நிலையும், மன உளைச்சலும் இதற்குக் காரணம் கூறலாம்…

நம்மில் சிலர்- பெரிய பதவியிலுள்ளவர்கள் ‘சிரித்துப் பேசக் கூடாது’ என்று கங்கணம் கட்டிக் கொண்டு இறுக்கமாகவே இருக்கிறார்கள். இந்தப் போக்கு மாற வேண்டும்…

நகைச்சுவை உணர்வால் மட்டுமே பொறுமை வளர்க்க முடியும். இன்றைய உலகத்தின் நெருக்கடிகள், துன்பங்களில் இருந்து விடுபட, சிரிப்பு ஒன்று தான் வழி…

உங்களால் சிரிக்க முடிகிறது என்றால் நல்ல மனதோடு இருக்கிறீர்கள் என்று பொருள். அதுதான் வாழ்க்கையை மகிழ்ச்சியாய் மாற்றும்…

ஆம் நண்பர்களே!

உள்ளத்தில் நகைச்சுவை உணர்வைக் கொண்டிருங்கள். நம் வாழ்நாளில் எவ்வளவு காலம் சிரிக்கின்றோமோ, அவ்வளவு காலம் கூடுதலாக வாழ்கின்றோம்.

சிரிப்பு இல்லாத வாழ்க்கை வெறும் செயற்கையான வாழ்க்கையாகி விடும். இந்த பரபரப்பான வாழ்க்கைச் சுழலில் மனம் விட்டு அடிக்கடி சிரிப்பது மிக அவசியமாகிறது.

சிரிப்பெனும் மருந்தை நாளும் அருந்துங்கள், மனம் விட்டு சிரியுங்கள். மனம் சுத்தமாகிறது, வளமடைகிறது. அதனால்!, நம்மால் இயன்ற வரை சிரித்து வாழ்ந்து, நமது ஆயுள்காலத்தை அதிகரிப்போம்.

வாழ்க நலமுடன்!
வே. இராஜவர்மன் டில்லி தலைமை ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published.