அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்
கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் இணையவழி வகுப்புகளையும் ஒத்திவைக்க அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார். தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்ததை அடுத்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அரைநாள் மட்டுமே விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டால், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தக் கூடாது என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பான உத்தரவில், “கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் (Online Classes) ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். ஆகையால் கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும் என அனைத்துப் பள்ளி நிர்வாகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.