இந்தியாவை, மக்களின் கலாசாரத்தை ஒருங்கிணைக்கும் பணியை

இந்தியாவில் அக்டோபர் 10-ம் தேதி தேசிய அஞ்சல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்திய அஞ்சல் துறை சார்பில் அஞ்சல் வாரம் வரும் 15-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. ஸ்டாம்ப் விற்பனை, பதிவு தபால், விரைவு தபால், இ- போஸ்ட், மணி ஆர்டர், பார்சல் சர்வீஸ் மற்றும் சேமிப்பு கணக்குகள் போன்ற பணிகளை மேற்கொண்டு தபால் துறை தனது மக்கள் சேவையை தொடர்ந்து வருகிறது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கிராமம், நகரம் வித்தியாசமின்றி இந்தியாவை, மக்களின் கலாசாரத்தை ஒருங்கிணைக்கும் பணியை தபால்துறை செய்து வருகிறது. பொதுமக்களிடம் கடிதம் எழுதும் பழக்கம் தொலைபேசி, வாட்சப், இ-மெயில் வரவால் குறைந்திருந்தாலும், தபால் வழியாக அனுப்பப்படும் அலுவல் ரீதியான கடிதங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு சேர்க்கும் பொறுப்பு இன்றும் தபால் துறை வசமே உள்ளது.

இந்நிலையில், கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தேசிய அஞ்சல் தினத்தை ஒட்டி கோவை கோட்ட தபால் கண்காணிப்பாளர் சிவசங்கரன் அஞ்சல்தலை மற்றும் நாணய கண்காட்சி துவக்கி வைத்தார். இதில், பள்ளியின் முதல்வர் விஷால் பந்தாரி, அஞ்சல் தலை மற்றும் நாணய சேகரிப்பு ஆர்வலர் செல்வராஜ், மாணவ, மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர். இதில், மாணவ, மாணவிகள் தங்களது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், பெற்றோர்களுக்கும் என விருப்பமானவர்களுக்கு கடிதம் எழுதினர். அப்படி எழுதிய கடிதங்களை காளப்பட்டி தபால் நிலையத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட்ட தபால் பெட்டியில் மாணவர்கள் போட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.