சென்னை சேப்பாக்கத்தில் 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்:

இந்தியா- இங்கிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று தொடங்குகிறது. முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்குமா? என்று இந்திய ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

சென்னை:

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இதே சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலாவது டெஸ்டில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. விளையாட்டு நிகழ்ச்சிகளை நேரில் பார்வையிட 50 சதவீதம் அனுமதிக்கலாம் என்று தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து 2-வது டெஸ்டுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆன் லைனில் விற்கப்பட்ட டிக்கெட் அரைமணி நேரத்தில் விற்று தீர்ந்தது. தினமும் 14 ஆயிரம் ரசிகர்கள் வரை நேரில் போட்டியை கண்டு களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் வருகை இந்திய அணி வீரர்களுக்கு எழுச்சி பெறுவதற்கான உத்வேகத்தை கொடுக்கும் என்று நம்பலாம்.

எஞ்சிய மூன்று டெஸ்டுகளில் ஒன்றில் தோற்றாலும் இ்ந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாது. குறைந்தது 2 வெற்றி, ஒரு டிரா என்ற வகையிலாவது முடிவு காண வேண்டும். அந்த வகையில் இந்த டெஸ்ட் இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? போராட்டம் என்றே சொல்லலாம்.

முதலாவது டெஸ்டில் இந்திய பவுலர்கள் ரன்களை வாரி வழங்கி விட்டனர். முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்கள் குவித்ததுமே ஆட்டம் ஏறக்குறைய நமது கையை விட்டு போய் விட்டது. முதலாவது இன்னிங்சில் புஜாரா, ரிஷாப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், 2-வது இன்னிங்சில் கேப்டன் விராட்கோலி, சுப்மான் கில் ஆகியோர் அரைசதம் அடித்தனர். இருப்பினும் யாராவது ஒருவர் மூன்று இலக்கத்தை கடந்து பெரிய ஸ்கோரை எட்டியிருந்தால் தோல்வியில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உருவாகி இருக்கும். துணை கேப்டன் அஜிங்யா ரஹானேவின் (1, 0) தடுமாற்றமும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

இதே போல் சுழலில் ஷபாஸ் நதீம், வாஷிங்டன் சுந்தர் வள்ளல் பவுலர்களாக மாறிப் போனார்கள். இதனால் இந்த டெஸ்டில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்பதில் சந்தேகமில்லை. கால்முட்டி காயத்தால் அவதிப்பட்ட ஆல்-ரவுண்டரும், சுழற்பந்து வீச்சாளருமான அக் ஷர் பட்டேல் குணமடைந்து விட்டதால் இந்த டெஸ்டில் அவர் அறிமுக வீரராக அடியெடுத்து வைக்கிறார். ஷபாஸ் நதீம் நீக்கப்படுகிறார். வாஷிங்டன் சுந்தரை பொறுத்தவரை அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுமா? அல்லது அவருக்கு பதிலாக மற்றொரு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அல்லது குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவார்களா? என்பது போட்டிக்கு முன்பே தெரிய வரும். மொத்தத்தில் முதலாவது டெஸ்ட் தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? என்பதே ரசிகர்களின் ஒரே எதிர்பார்ப்பாகும்.

இங்கிலாந்து அணி தொடக்க டெஸ்டில் கிடைத்த வெற்றி உற்சாகத்துடன் களம் இறங்கும். ஆனாலும் ஆச்சரியப்படும் வகையில் அந்த அணி 4 மாற்றங்களை செய்துள்ளது. வீரர்களுக்கு பணிச்சுமையை குறைக்க சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்படுகிறது. ‘ரிவர்ஸ் ஸ்விங்’ தாக்குதலில் மிரள வைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன், சுழற்பந்து வீச்சாளர் டாம் பெஸ், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் மற்றும் வலது முழங்கையில் காயத்தால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பென் போக்ஸ், மொயீன் அலி, ஆலி ஸ்டோன், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருப்பதாக அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

தொடக்க டெஸ்டில் இரட்டை சதம் நொறுக்கி ஹீரோவாக ஜொலித்த கேப்டன் ஜோ ரூட், ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரைத் தான் இங்கிலாந்து அதிகம் நம்பி இருக்கிறது. இவர்கள் நிலைத்து நின்று விளையாடுவதை பொறுத்தே அந்த அணியின் ஸ்கோர் அமையும் என்பதில் சந்தேகமில்லை. முதலாவது டெஸ்டில் சுழற்பந்து வீச்சை திறம்பட சமாளித்த இவர்கள் இன்றைய டெஸ்டிலும் சாதிக்கும் முனைப்புடன் தங்களை தயார்படுத்தி உள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற எஞ்சிய 3 டெஸ்டில் குறைந்தது 2-ல் வெற்றி பெற வேண்டி இருப்பதால் இந்த டெஸ்ட் இங்கிலாந்துக்கும் முக்கியமானதாக அமைந்துள்ளது.

முதலாவது டெஸ்டுக்கான ஆடுகளத்தில் முதல் இரண்டரை நாட்கள் சுழல் துளியும் எடுபடவில்லை. இதனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மலைபோல் ரன் குவித்து விட்டனர். இந்த டெஸ்டுக்கு அருகில் உள்ள மற்றொரு ஆடுகளம் பயன்படுத்தப்படுகிறது. முதலாவது டெஸ்டுக்குரிய ஆடுகளம் முழுக்க முழுக்க செம்மண்ணால் உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த ஆடுகளத்தில் மேல் அடுக்கில் கரிசல் மண் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வெயிலில் ஆடுகளம் நன்கு காய்ந்து உலரும் போது, வெடிப்பு ஏற்பட்டு சீக்கிரமாகவே பந்து சுழன்று திரும்ப தொடங்கி விடும். அதாவது முதல் நாளிலேயே பந்தில் ஓரளவு சுழற்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ‘டாஸ்’ ஜெயிக்கும் அணி முதலில் பேட்டிங்கையே விரும்பும்.

இது இந்தியாவுக்கு உகந்ததாக அமையுமா? அல்லது இந்த சூழலையும் இங்கிலாந்து சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அச்சுறுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

செய்தியாளர் ரஹ்மான்

தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.