வீட்டு மனை முறைகேடு: லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு ஐகோர்ட் தடை விதிப்பு
கூட்டுறவு வீட்டு வசதி சங்க வீட்டு மனைகளுக்கு ஒப்புதல் தந்ததில் எழுந்த முறைகேடு புகார் தொடர்பான லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சேலத்தில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் மூலம் உருவாக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கு ஒப்புதல் தந்ததில் முறைகேடு என புகார் அளிக்கப்பட்டது. புகார் தொடர்பான சிறப்பு தணிக்கைக் குழு அறிக்கை அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. விசாரணையின் அடிப்படையில், எலவமலை கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் முறைகேடு நடந்ததாக பதிவாளர் உள்பட 14 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் பதிவாளர் ஏ டி பாஸ்கரன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முறைகேடுகளுக்கு முகாந்திரம் உள்ளது என சிறப்பு தணிக்கை குழு அறிக்கை அளித்ததால் விசாரணைக்கு உத்தரவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டதை இறுதி நடவடிக்கையாக கருதக் கூடாது என கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கவனித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கின் விரிவான விசாரணைக்காக அக்டோபர்.15-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.