உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை
வேலூர் : வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஹான்ஸ், கூல் லிப் விற்ற 8 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில், போதை பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம், சீல் வைப்பு நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.
அதன்படி வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் சந்திரகலா, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் ஆகியோர் உத்தரவின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் பழனிச்சாமி, இளங்கோவன், ரவிச்சந்திரன் ஆகியோர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
இதில் வேலூர் அடுத்த காட்பாடி கிளித்தான்பட்டறை பகுதியில் நேற்று நடத்திய ரெய்டில் அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் ஹான்ஸ், கூல் லிப் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். அதேபோல் சேவூரில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விற்பனை செய்த மற்றொரு கடைக்கு சீல் வைத்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
அதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி மற்றும் பூங்குளம் பகுதியில் ஹான்ஸ், கூல் லிப் விற்ற 2 கடைகளுக்கு சீல் வைத்து தலா ரூ.25 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் போலீசார் இணைந்து நடத்திய சோதனையில் மளிகை கடை மற்றும் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா விற்ற 4 கடைகளுக்கு சீல் வைத்து தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 3 மாவட்டங்களில் 2 நாட்களில் மொத்தம் 8 கடைகளுக்கு சீல் வைத்து ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த முறை இதே கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.