சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைய உள்ள
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைய உள்ள மேம்பாலப் பணிகள் வரும் 2027ம் ஆண்டு தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையின் அபரிமித வளர்ச்சியாலும், நாளுக்குநாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாகவும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, முக்கிய சாலைகளான பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை, மெரினா காமராஜர் சாலை மற்றும் ஓஎம்ஆர், இசிஆர், தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கியமான சாலையான ஜிஎஸ்டி சாலை என அனைத்து சாலைகளிலும் சாரைசாரையாக அணிவகுத்து செல்லும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ பணிகள் காரணத்தினாலும், பொதுமக்கள் தங்களது சொந்த வாகனங்களை அதிகமாக பயன்படுத்துவதாலும் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்னையாக மாறி இருக்கிறது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், வள்ளுவர் கோட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 4 வழிச் சாலையுடன் புதிய மேம்பாலம் அமைக்க சென்னை மாநகராட்சி கடந்த 2022ம் ஆண்டு ஒப்புதல் அளித்திருந்தது. இந்த பாலம் பாலம் 570 மீட்டர் நீளத்திலும், 15 மீட்டர் அகலத்திலும் கட்டப்பட உள்ளது. 2000 சதுர அடியில் அமைய இருக்கும் இந்த மேம்பாலத்திற்கு இன்னும் 10 ஆயிரம் சதுர அடிகள் தேவைப்பட உள்ளது. அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் இன்னமும் ஈடுபட்டு வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் உத்தமர் காந்தி சாலையில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையை ஒருவழிப்பாதையாக போக்குவரத்து காவல்துறை மாற்றி உள்ளது. இதனால் மேம்பாலம் அமைக்கும் பணி சற்று கடினமாகி உள்ளது. மேலும் வள்ளுவர் கோட்டத்தில் அமைக்க திட்டமிட்டிருந்த மேம்பாலம் தாமதமாகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது போக்குவரத்து மாற்றத்தால் வள்ளுவர் கோட்டம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. தற்போது இந்த மேம்பாலம் அமைக்கும் பணியும் தொடங்கினால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். இதனால் இந்த பாலம் அமைக்கும் பணி 2027ம் ஆண்டுதான் தொடங்க திட்டமிட்டு இருக்கிறோம். மேலும் நிலம் கையகப்படுத்துவதிலும் சில பிரச்னைகள் உள்ளன. அதையும் சரி செய்ய நேரம் தேவைப்படுகிறது.
அதுமட்டுமின்றி தற்போது உள்ள திட்டப்படி மேம்பாலம் அமைக்கப்பட்டால் வள்ளுவர் கோட்டத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும். ஆனால் உத்தமர் காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த திட்டத்தை மறுவரை செய்ய இருக்கிறது. வள்ளுவர் கோட்டத்தில் அமைக்கப்பட இருக்கும் மேம்பாலம் அண்ணா மேம்பாலத்துடன் இணைக்க திட்டமிட்டு இருக்கிறோம். இருப்பினும் இது தொடர்பாக நெடுஞ்சாலை துறையிடம் ஆலோசனை பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- தற்போது போக்குவரத்து மாற்றத்தால் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே, இந்த மேம்பாலம் அமைக்கும் பணியை தொடங்கினால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும்