திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் டிசம்பர் 13ஆம் தேதி நடைபெற இருப்பதை முன்னிட்டு, பக்தர்களின் கரகோஷத்துடன் பந்தக்கால் நடப்பட்டது.

திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும் நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்பட இருக்கிறது. இதற்காக கோவிலில் இருந்து பந்தக்கால் எடுத்து வரப்பட்டு, ராஜகோபுரம் முன்பு பக்தர்களின் கரகோஷத்துடன் நடப்பட்டது.

இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவில் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், டிசம்பர் 1ஆம் தேதி துர்க்கை அம்மன் உற்சாகத்துடன் தொடங்கும் இந்த கார்த்திகை தீப திருவிழா, டிசம்பர் 4ஆம் தேதி அருணாச்சலீஸ்வரர் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் நடத்தப்படுகிறது.

அதன் பின்னர் பத்து நாட்கள் காலை மற்றும் இரவில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதியுலா நடைபெறும். டிசம்பர் 13ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு மலை மேல் மகா தீபமும் ஏற்றப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.