டிஐஜி மீது வழக்கு பதிவு செய்த சிபிசிஐடிக்கு
சிறையில் ஆயுள் தண்டனை கைதி தாக்கப்பட்டது தொடர்பாக டிஐஜி மீது வழக்கு பதிவு செய்த சிபிசிஐடிக்கு ஐகோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (30). இவர் ஒரு குற்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். சிவகுமாரை, விதிமுறைகளை மீறி சிறைத்துறை வேலூர் சரக டிஐஜி-யான ராஜலட்சுமி தனது வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதாகவும், ராஜலட்சுமி வீட்டில் ரூ.4.25 லட்சம் திருடியதாக சிவகுமாரை 95 நாள்கள் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகவும் புகார் கூறப்பட்டது.
இது தொடர்பாக சிவகுமாரின் தாயார் கலாவதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புகாரில் தொடர்புடைய டிஐஜி-யான ராஜலட்சுமி, வேலூர் மத்திய சிறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான், ஜெயிலர் அருள் குமரன், உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், என்.செந்தில் குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக், இந்த விவகாரத்தில் சிபிசிஐடி(CB-CID) எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சீல் வைக்கப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்தார். இதனை பரிசீலித்த நீதிபதிகள், நீதிமன்றம் உத்தரவிட்டதும் உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்காக சிபிசிஐடிக்கு பாராட்டு தெரிவித்தனர்.மேலும், இந்த ஒரு வழக்கு மட்டுமின்றி மற்ற விவகாரங்கள் குறித்தும் முழுமையாக சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டுமெனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். சீர்திருத்தம் செய்யும் இடமாக உள்ள சிறையில் கைதிகள் முறையாக நடத்தப்படவில்லை என்றால், அவர்கள் வெளியில் வந்த பிறகும் குற்றச்செயலில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.இந்த வழக்கை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியுள்ளதாக கூறிய நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.