அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில்
அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ இரயில் நிலையங்களில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் வசதிகளை விரிவுபடுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர் சிலைக்கு பின்புறம், நிலையத்தின் மறுபுறம் அமைந்துள்ள புதிதாக புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடம் பேவர் பிளாக்குகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது மற்றும் கூடுதலாக 300 இரு சக்கர வாகனங்கள் நிறுத்த முடியும்.
தற்போது, அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் 1,300 இருசக்கர வாகனங்களும் 180 நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்த முடியும். இந்தகூடுதல் இடம் பயணிகளுக்கு அதிக வசதியை வழங்கும். மேலும் அதிகமான பயணிகள் மெட்ரோ சேவைகளை எளிதாகவும் திறமையாகவும் பயன்படுத்த ஊக்குவிக்கும். இந்த மேம்படுத்தப்பட்ட வாகன நிறுத்தும் வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) இன்று அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமை ஆலோசகர் கோபிநாத் மல்லியா (இயக்கம் மற்றும் பராமரிப்பு), கூடுதல் பொது மேலாளர் எஸ். சதீஷ் பிரபு (தொடர்வண்டி மற்றும்இயக்கம்), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.