உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்
திருமணத்திற்கு பிறகு கருத்தரித்தல் தாமதித்தால் இளம்பெண்களை செயற்கை கருவூட்டலுக்கு தள்ளப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு:
என்ன தான் நவீன வளர்ச்சியில் நாடு உச்சம் தொட்டாலும் சமுதாயத்தில் வெகுஜன மனநிலை என்ற ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் ஆண் எப்படி இருக்க வேண்டும்? பெண் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பான கருத்தை குடும்பமும், சமுதாயமும் நமக்குள் ஆழமாக செலுத்தி விடுகின்றன. அதன்பின்னர் வளரும் போது நமக்கென்று தனித் தன்மையை உருவாக்க வேண்டும். ஆனால் நாம் சமுதாயம் சொல்கின்ற ஆளாக மட்டுமே மாறுகிறோம்.
இவ்வாறு ஒரு பெண் முழுமையான ஆளாக மாறும் போது, உடல் ரீதியான மாற்றம் மட்டுமே நடக்கிறதே தவிர உளவியல் ரீதியாக எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. மேலும் வெகுஜன மனநிலை உருவாகும் போது ஒரு பெண் எல்லோரும் சொல்வதைக் கேட்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார். திருமணத்திற்கு பிறகு கருத்தரித்தல் தாமதித்து மகப்பேறு சிக்கல்களுக்கு ஆளாகும் பெண்களின் நிலை, இந்த சூழல் வளையத்திற்குள் சிக்கி நிற்கிறது என்பது ஆய்வுகள் வெளியிட்டுள்ள தகவல்.