குஜராத்தில் விநாயகர் சிலை பந்தல் மீது கல்வீச்சு
குஜராத்தில் விநாயகர் சிலை பந்தல் மீது கல்வீச்சு சம்பவம் நடந்ததால், போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை கலைத்தனர். குஜராத் மாநிலம் சூரத் நகரத்தின் சையத்புரா பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அங்கு பந்தல் அழைக்கப்பட்டு, விநாயகர் சிலையை வைத்து சிலர் வழிபட்டனர். அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிலர், விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த பந்தல் மீது கற்களை வீசியுள்ளனர். அதனால் இரு தரப்பினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். பதற்றம் ஏற்பட்டதால் கூட்டத்தை கலைக்க வேண்டி, போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினார்கள்.
சம்பவம் நடந்த இடத்தை சுற்றி 1,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து சூரத் போலீஸ் கமிஷனர் அனுபம் சிங் கெலாட் கூறுகையில், ‘விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த பந்தல் மீது சிறுவர்கள் சிலர் கற்களை வீசியுள்ளனர். அதனால் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. இச்சம்பவத்தில் 27 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். அவர்களில் 6 பேரை கைது செய்துள்ளோம்’ என்றார். சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நபர்கள் கண்டறியப்பட்டு வருவதாக மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார்.

