சளிக்கு மருந்தாகும் வெற்றிலை
குழந்தைகளுக்கு சளி காய்ச்சல் என்றாலே பெற்றோர்கள் பதறி அடித்துக்கொண்டு மருத்துவரிடம் ஓடுகின்றனர். ஆனால் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் எதற்கும் பதற்றப்படத் தேவையில்லை சின்ன சின்ன கை வைத்தியங்களை செய்து குழந்தைகளுக்கு முதலுதவி சிகிச்சை செய்வார்கள். அப்புறம் மெதுவாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம். சிறு குழந்தைகளின் சளியை போக்குவதில் வெற்றிலை மிக முக்கிய பங்காற்றுகிறது. மூலிகை குணம் நிறைந்த வெற்றிலை குழந்தைகளின் நோயை போக்குவது குறித்து அனுபவம் வாய்ந்த பாட்டி சொல்வதை கேளுங்களேன்.
மூச்சுதிணறல் குணமாகும்
குழந்தைகளுக்கு சளி அதிகமானால் இருமலும் மூச்சுத் திணறலும் ஏற்படும் அவர்களுக்கு வெற்றிலை சிறந்த நிவாரணம் அளிக்கிறது. வெற்றிலையை லேசாக மெழுகுவர்த்தி நெருப்பில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும். வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.