மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக்
மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் முதல்முறையாக 20 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது . இதற்கு முன்பு 2020 டோக்கியோ பாராலிம்பிக்ஸில் வென்ற 19 பதக்கங்களே அதிகபட்சமாக இருந்தது.
நேற்றிரவு நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி63 பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் ஷரத் குமார் வெள்ளிப் பதக்கத்தையும், மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். இதன் மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வெற்ற சாதனையை மாரியப்பன் தங்கவேலு படைத்துள்ளார்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில், இந்திய வீரர் அஜீத் சிங் 65.62 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கத்தையும், மற்றொரு இந்திய வீரர் சுந்தர் சிங் 64.96 மீட்டர் தூரம் வீசி வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தியுள்ளனர். இதன் மூலம் 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என 20 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.