அருப்புக்கோட்டை – திருச்சுழி சாலையில் நேற்று மறியல்
அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல் நடத்திய 8 பேர் மீது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெருமாள்தேவன்பட்டியை சேர்ந்தவர் காளிக்குமார் (28). சரக்கு வாகன டிரைவர். இவர் பணம் கொடுக்கல் வாங்கல், முன்விரோதம் காரணமாக 2 பைக்குகளில் வந்த 6 பேர் கும்பல் திடீரென வழிமறித்து காளிக்குமாரை, மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காளிக்குமாரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இக்கொலை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, காளிக்குமார் கொலை சம்பவத்தை கண்டித்தும் இக்கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறி அவரின் உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அருப்புக்கோட்டை – திருச்சுழி சாலையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. காயத்ரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றார். இதையடுத்து அங்கு வந்த அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி, உங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும். மறியலில் ஈடுபட வேண்டாம். கலைந்து செல்லுங்கள் என கூறினார்.
அப்போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் திடீரென டி.எஸ்.பி. காயத்ரியின் தலைமுடியை இழுத்து தாக்கினார். மேலும், அவரை தாக்க முற்பட்டார். இதை தடுக்க முயன்ற பிற போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதலானது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
இதனையடுத்து, விருதுநகர் மாவட்ட எஸ்.பி. தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், ஒருவர் தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், டி.எஸ்.பி. காயத்ரி மீது தாக்குதல் நடத்திய 8 பேர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 9 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.