ஆன்மீக செய்தியில்……மாவிளக்கு வழிபாடு

முன்பெல்லாம் பண்டிகை தினத்தில் பச்சரிசியை ஊற வைத்து மைய அரைத்து நீர்விட்டு கரைத்து வாசல்,வீடுகளில் மாக்கோலம் இடுவர்.அதே போல் மாவிளக்கும் போடுவது வழக்கம்.

ஒவ்வொரு பண்டிகைக்கும் மாவிளக்கு போடா விட்டாலும் அம்மன் வழிபாடு நடக்கும் நாட்களிலும்,குலதெய்வ வழிபாடு நடக்கும் நாட்களிலும் மாவிளக்கு போடுவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

ஆறு,குளங்களுக்கு அருகில் இருக்கும் அம்மன் கோவில்களில் இப்படி மாவிளக்கேற்றி வழிபடுவது இரட்டிப்பு பலனை தரும்.

பச்சரிசி மாவோடு வெல்லம்,இளநீர் சேர்த்து பிசைந்து மாவிளக்கு போடுவது பண்டைய நாட்களின் பழக்கம்.ஆனால் அவசர யுகத்தில் இவ்வழக்கம் மாறிவிட்டது.

இப்படி வீடுகளில் மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால் வறுமை நீங்கும்.

காணும் இடங்களெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பேரொளி வடிவான இறைத்துவத்தையே இந்த மாவிளக்கு உணர்த்துகிறது.

அரிசி[அன்னம்] பிராணமயம்.அன்னம் பிரம்ம ரூபம்.உலகிலுள்ள உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குவது அன்னமே.வெல்லத்தின் குணம் இனிப்பு.இனிப்புக்கு மதுரம் என்று மற்றொரு பெயருண்டு.அம்பிகையை மதுரமானவள் என புராணங்கள் சொல்கின்றது.அதாவது இனிய குணமுடையவள் என பொருள்.

ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் மதுரமான அம்பிகையே உறைகிறாள்.அக்னி பகவான் நெய்யில் வாசம் செய்கிறார் என்பது ஐதீகம்.நெய்யை வார்தே ஓமங்கள் வளர்க்கிறோம்.

ஓமங்கள் மூலம் நாம் சமர்ப்பிக்கும் பொருட்களை அக்னியே உரிய தேவதைகளிடம் சேர்க்கிறார்.அக்னி பகவானின் சக்தி நெய்யில் அடங்கியுள்ளது.

மாவிளக்கில் ஜோதியாக நின்று ஒளிரும் ஜோதி ரூபமாக அம்பிகை நம் வீடுகள் தோறும் அருள் புரிவதற்காகவே
மாவிளக்கு ஏற்றுகிறோம்.

நம்மையே விளக்காகவும்,மனதை நெய்யாகவும்,அன்பை தீபமாகவும் அர்ப்பணிக்கும் ஒரு அபூர்வ வழிபாடு இந்த மாவிளக்கு ஏற்றி வழிபடுவது.

அம்மன் கோவிலில் மட்டுமல்லாமல் அவரவர் குலதெய்வத்திற்கு ஆண்டுக்கு ஒரு முறையாவது மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

அம்மன் அருள் பெற, அம்பிகையே!
எங்கள் நோய் நொடியைப்போக்கி,ஆரோக்கியத்தை தந்தருள வேண்டும்!!
உன் அருளால் குடும்பத்தில் அனைவரும் நல்வாழ்வு பெற வேண்டும் என வேண்டிக் கொண்டு மாவிளக்கேற்றி
வழிபாடு செய்வோம்
நலம் பெறுவோம்

Leave a Reply

Your email address will not be published.