வானிலை மையம் தகவல்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.

இது மேலும், அடுத்த 36 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒரிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள்; நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல், நாளை (ஆகஸ்ட் 31) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வலுவான தரைக்காற்று வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இன்று சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.