டாஸ் வென்ற வெ.இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது

தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் ஆடியது. இதில் முதல் 2 போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் 3வது மற்றும் கடைசி டி.20 போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்தது. டாஸ் வென்ற வெ.இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. ரோமேன் பவலுக்கு ஓய்வு அளிக்கப்பட ரோஸ்டன் சேஸ் வெ.இண்டீஸ் கேப்டனாக செயல்பட்டார்.

முதலில் பேட் செய்த தென்ஆப்ரிக்கா 4.2 ஓவாில் 23ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆட்டம் பாதிக்கப்பட்டு பின்னர் 13 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்டு தொடங்கியது. ரீசா ஹென்ட்ரிக்ஸ் 9, ரியான் ரிக்கல்டன் 27, கேப்டன் மார்க்ரம் 20 ரன்னில் வெளியறே அதிகபட்சமாக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 15 பந்தில் 40 ரன் அடித்தார். 13 ஓவரில் தென்ஆப்ரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன் எடுத்தது.

பின்னர் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு 13 ஓவரில் 116ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணியின் தொடக்க வீரர் அலிக் அத்தானாஸ் 1 ரன்னில் வெளியேற பின்னர் வந்த நிக்கோலஸ் பூரன் 13 பந்தில், 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 35ரன் எடுத்து அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் ஷாய் ஷோப் நாட்அவுட்டாக 24 பந்தில் ஒரு பவுண்டரி, 4 சிக்சருடன் 42, ஷிம்ரோன் ஹெட்மியர் 17 பந்தில், 4பவுண்டரி, ஒரு சிக்சருடன் 31ரன் விளாச, 9.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 116 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றிமூலம் 3-0 என வெஸ்ட்இண்டீஸ் தொடரை கைப்பற்றி தென்ஆப்ரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது. 2 விக்கெட் எடுத்த வெஸ்ட்இண்டீசின் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆட்டநாயகன் விருதும், 3 போட்டியில் 134 ரன் அடித்த ஷாய் ஹோப் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். முன்னதாக 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என தென்ஆப்ரிக்கா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.