விநாயகர் சதுர்த்திப் பெருவிழா

பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. செப்.6ல் தேரோட்டமும், 7ம் தேதி தீர்த்தவாரியும் நடக்கிறது. இதையொட்டி கோயிலைச் சுற்றி பந்தல் அமைக்கும் பணியும், தேரை சீரமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே, பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டிற்கான விழா நாளை (ஆக.29) காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி குடிநீர், பார்க்கிங் வசதிகள், பக்தர்கள் சிரமமின்றி செல்ல ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் சிறப்பு தரிசனத்திற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கொட்டகை அமைத்தல் மற்றும் கோயிலின் முன்புறம் உள்ள குளத்தில் முழுமையாக நீர் நிரப்பப்பட்டு வருகிறது. மேலும் சதுர்த்தி விழாவிற்கான தேவையான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் மூலவர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வருவார். 2ம் நாள் (ஆக.30) முதல் 8ம் திருநாள் வரை தினந்தோறும் காலையில் சுவாமி வெள்ளி கேடகத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருவார்.

செப்.6ம் தேதி மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை வருடம் ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு தரிசனம் தருவார். மாலை 4 மணியவில் பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெறும். 10ம் திருநாளான செப்.7ம் தேதி காலையில் கோயில் குளத்தில் விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். மதியம் உச்சிகால பூஜையில் மூலவருக்கு ராட்சத கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அன்று இரவு பஞ்ச மூர்த்திகள் திருவீதிஉலா நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி ராம.செட்டியார், பூலாங்குறிச்சி சுப.முத்துராமன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.